Wednesday, 8 March 2017

தாமிரபரணியின் வரலாறு


பெயர் காரணம்

தாமிரபரணி ஆற்றை ‘தாமிரவருணி’ என்றும் அழைக்கிறார்கள். தாராளமாக அழைக்கலாம். தவறில்லை. வருண பகவானைபோல பொழிவதால் ‘வருணி’ என்று வர்ணிக்கிறார்கள். இதுவே ‘தாமிரவருணி’க்கான பெயர்க் காரணம். ஆனால், வியாசரின் மகாபாரதத்திலும், வால்மீகியின் ராமாயணத்திலும், காளி தாசரின் ரகுவம்சத்திலும் இந்த நதி ‘தாம்பிரபரணி’, ‘தாமிரபருணி’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர் பிஷப் கால்டுவெல், “கி.மு. மூன்றாம் நூற் றாண்டுக்கு முன் இலங்கை தீவு ‘தம்பர பன்னி’, ‘தாப்ர பன்னெ’, ‘தாம்ப பன்னி’ என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இது அசோகரின் கல்வெட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இலங்கையிலிருந்து இங்கு புலம் பெயர்ந்தவர்கள் அந்தப் பெயரி லேயே ஆற்றையும் அழைத்திருக்கலாம். அதுவே பிற்காலத்தில் தாமிரபரணி ஆகியிருக்கலாம்” என்கிறார்.

வரலாற்று ஆய்வாளர் ஸ்டீபன் தொகுத்த ‘பண்பாடு வேர்களைத் தேடி’ வரலாற்றுப் புத்தகத்தில், “குமரியைக் கடல் கொள்ளும் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலை இலங்கை வரை நீண்டிருந்தது. அதிலிருந்த பொதிகை மலைதான் உலகில் முதலில் தோன்றிய மலை. முதல் உயிர் தோன்றியதும் பொதிகையில்தான். தற்போதும் இலங்கையில் உள்ள ஆதாம் மலையில் முதல் மனிதனின் பாதம் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.” என்று தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான தொடர்புகளை குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியங்களில் தாமிரபரணி

சங்க இலக்கியங்கள் தாமிரபரணியை ‘தன் பொருநை’, ‘பொருநை’ என்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் பிறந்த நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் தாமிரபரணியை ‘தன்பொருநல்’, ‘வண்பொருநல்’ என்கிறார். சிலப்பதி காரம் சேரனை,‘பொருநை பொறையன்’ என்று போற்றுகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாண்டிய நாட்டை ‘தன்பொருநைப்புனல் நாடு’ என்கிறார்.

‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருநதி’ என்கிறார் கம்பர். ‘அழகர் கருணைப்போல பொருநை பெருகிவரும் அழகைப் பாரும் பள்ளீரே’ என்கிறது முக்கூடற்பள்ளு. ‘தமிழ் கண்டது வைகையும் பொருநையும்’ என்கிறார் பாரதியார். முதல் ராஜராஜன் காலமான 1013-ம் வருடம் வெட்டப்பட்ட கல்வெட்டு, தாமிரபரணியில் சிற்றாறு (சித்ரா நதி) கலக்கும் இடத்தில் தாமிர பரணியை ‘தன் பொருந்தம்’ என்று குறிப் பிடுகிறது. தாமிரம் என்றால் செம்பு. தாமி ரக் கனிமம் கலந்த தண்ணீர் என்பதால் தாமிரபரணி பெயர் வந்திருக்கலாம்.

நெல்லை, தூத்துகுடியில் தாமிரபரணி

தாமிரபரணி நதியில் எட்டு நீர்த்தேக் கங்கள், அவற்றில் 11 கால்வாய்கள் இருக்கின்றன. மலையில் ஏழு துணை ஆறுகளும், சமவெளியில் ஐந்து துணை ஆறுகளும் மொத்தம் 12 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. தோன்றுமிடம் தொடங்கி தூத்துகுடி மாவட்டம், புன்னைக்காயல் வரை 120 கி.மீ. பயணித்து மன்னார் வளகுடாவில் கலக்கிறது.

தாமிரபரணி நதியின் வடிநிலத்தில் சராசரி ஆண்டு மழையளவு 1082 மி.மீ. நதியின் மொத்த வடிநிலப்பரப்பு 5,969 சதுர கி.மீ. இதில் 5,317 கி.மீ. (89%) திருநெல்வேலி மாவட்டத்திலும் 652 சதுர கி.மீ. (11%) தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிறது. திருநெல் வேலி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப் பான 6,780 சதுர கி.மீட்டரில் தாமிரபரணி யின் வடிநிலப்பரப்பு மட்டும் 78 %. தூத் துக்குடி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 4,649 சதுர கி.மீட்டரில் நதியின் வடிநிலப்பரப்பு 14 %. இந்த வடிநிலப்பகுதிகளில் இருக்கும் கிணறு களின் எண்ணிக்கை 71,064. குளங்களின் எண்ணிக்கை 1,300. குளங்களின் நீர் கொள்ளளவு 196 மில்லியன் கன மீட்டர்.

தாமிரபரணி நதியால் திருநெல்வேலி யில் 40,000 ஏக்கர், தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அக்டோபர் 15-ம் தேதி முதல் மார்ச் இறுதி வரை வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பயிரிடும் முறையை பிசான சாகுபடி என்கிறார்கள். ஜூன் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பயிரிடும் முறையை கார் சாகுபடி என்கிறார்கள். கார் சாகுபடியில் 86 % நெல் பயிரிடுகிறார்கள். தவிர, நதியின் கடைப் பகுதியான மருதூர் மற்றும் வைகுண்டம் அணைக்கட்டுகளின் கீழ் பகுதிகளில் இரு போக பாசனப் பகுதியில் பழந்தொழி என்கிற சிறப்பு சாகுபடி தண்ணீர் இருப்பைப் பொறுத்து ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும்.

நதியின் மொத்த நீர் எவ்வளவு?

நதியின் வடிநிலப்பகுதியின் மொத்த நிலத்தடி நீர் இருப்பு 744.19 மில்லியன் கன மீட்டர். நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் அளவு 1,375.36 மில்லியன் கன மீட்டர். ஆக, மொத்த நீர் ஆதாரம் 2119.55 மில்லியன் கன மீட்டர். இதில் விவசாயத்துக்கு 2,645.00 மில்லியன் கன மீட்டர்; வீட்டு உபயோகத்துக்கு 48.72 மில்லியன் கன மீட்டர்; தொழிற்சாலை உபயோகத்துக்கு 32.98 மில்லியன் கன மீட்டர்; கால்நடை, மீன் வளர்ப்பு மற்றும் இதர உபயோகங்களுக்கு 21.32 மில்லியன் கன மீட்டர் என மொத்தம் 2,748.02 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆக, மொத்த நீர் பற்றாக்குறை 628.47 மில்லியன் கன மீட்டர். இந்தப் பற்றாக்குறையை நதியை மேலும் சிறப்பாக பாதுகாப்பது, அணைகளை தூர் வாருவது, போன்ற நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் சரி செய்து, உபரி நீரையும் பெற முடியும்.

அருமருந்தான ஆற்று நீர்

பனித்துளி தொடங்கி மழை நீர், கிணற்று நீர், ஆற்று நீர்,கடல் நீர் என ஒவ்வொரு நீருக்கும் பிரத்தியேக குணம் இருக்கிறது என்கிறது சித்த மருத்துவ நூலான ‘நோயில்லா நெறி மற்றும் பதார்த்த குண சிந்தாமணி’. அது தாமிரவருணியின் நீரை,

“தாம்பிரவாற் றுப்புனலால் சுரமும் பித்துவிழித்

தும்பிரமுட் காய்ச்சல் சுவாச நோய் - சோம்பிமிகக்

கக்குகய மென்புருக்கி கைகா லெரிவடனே

மிக்குறுதா கங்களும்போம் விள்”

- என்று குறிப்பிடுகிறது.

தாமிரவருணியின் நீர், எல்லாவகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண் புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர் வேட்கை இவைகளை தீர்க்கும் என்பது அதன் பொருள்.


தாமிரபரணி, இந்தியாவில் உள்ள சிறப்பான நதிகளில் இதுவும் ஒன்று. பொதிகை மலை உச்சியில் தொடங்கி வங்க கடலில் வாசம் செய்யும் இந்த நதியைப் பற்றி பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு.
தாமிரபரணி நதியைப் பற்றி கூறும் போது அதன் வெவ்வேறு பெயர்களைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். அதே நேரம் தாமிரபரணி என்னும் பெயர் எப்படி வந்து இருக்கும் எனவும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். வால்மீகி ராமாயணத்திலும், வியாசர் பாரதத்திலும் காளிதாசனின் இரகுவம்சத்திலும் தாமிரபரணி பற்றி “தாம்பிரபரணி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாமிரபருணி எனவும் இதை கூறி இருக்கிறார்கள். இந்த பெயர் எல்லாம் மருவி தான் இப்போது தாமிரபரணி என்று அழைக்கப்படுகிறது.
வாரகமிகிரர் என்பவர் 505-587-ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர். இவர் கூட தாமிரபரணி பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ஆக பழம்பெரும் நதி தாமிரபரணி . தாமிரபரணி – தாமிரபரணி என்றால் தாமிரம்+பரணி . தாமிரம் என்றால் செம்பு. அதாவது தாமிரம் கலந்த பரணி நதி தாமிரபரணி நதியானது. தாமிரசத்து நோய் தீர்க்கும் அரிய மருந்து. இந்த ஆற்றின் கரையில் தாமிரசத்து நிறைந்து காணப்படுகிறது. ஆகவே தாமிரபரணியில் குளித்தால் நோய் தீர்ந்து அற்புதம் மலர்கிறது. தாமிரம் நிறைந்த ஆறு தாமிரபரணி என அழைக்கப்படுகிறது என நெல்லை மாவட்ட மக்கள் பெயர் வந்த காரணத்தை பேசுகிறார்கள்.
பொருநை- இந்த தாமிரபரணிக்கு பொருநை நதி என்றும் மற்றுமொரு பெயரும் உண்டு. இந்த பெயர் எப்படி வந்தது என்று ஆராய்ந்த போது, தமிழ் நுhல்களில் பிற்காலங்களில் இந்த ஆற்றை தண் பொருநை என்று அழைத்தது தெரியவருகிறது. அதே நேரம் சிலப்பதிகாரத்தில் காவிரியை தண்பொருநை என்று குறிப்பிடுகிறார்கள். இருந்தாலும் தன்பொருநை என்று அதிக நுhல்கள் தாமிரபரணியை தான் குறிப்பிடுகிறது. நம்மாழ்வார் தாமிரபரணியை பொருநல் என்று குறிப்பிடுகிறார். அதாவது பொருந்தம் என்னும் பெயரே பிற்காலங்களில் பொருநை என்று அழைக்கப்படுகிறது.
அதாவது பொருந்தம் என்றால் பொருந்துதல் என்னும் பொருள்படுகிறது. முதல் ராஜராஜனுடைய 28 ஆம் கல்வெட்டுகள் 1013 வருடம் வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் காணுமிடமான சீவலப்பேரியை அடுத்த சிற்றாறு (சித்திரா நதி) கலக்கும் பகுதியில் தாமிரபரணி நதியை தன் பொருந்தம் என்று குறிப்பிட்டுள்ளனர். பெரிய புராணத்தில் பாண்டிய நாட்டை குறிப்பிடும் போது சேக்கிழார் தாமிரபரணி ஆற்றை மனதில் கொண்டு “தண் பொருந்தப் புனல் நாடு” என்று தான் குறிப்பிடுகிறார்.
ஆகவே தாமிரபரணி தமிழ் நூல்களில் பொருநை, பொருநல, தண் பொருநை, தண் பொருந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  தாமிரபரணி செங்குத்தான பொதிகை மலையில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இதை பாணதீர்த்தம் என்று அழைக்கிறோம்.

நகரத்தின் கரையோரத்தில் பெருகி வழிந்தோடுகிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடங்கி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது.
தாமிரபரணி இப்பெயரை பெற காரணமாக இருந்தது தாமிரம் என்ற உலோகம் இங்கு அதிகமாக காணப்படுவதே. மேலும் இயற்கை மூலிகைகள் பலவற்றை கொண்டுள்ள பொதிகை மலைகளை கடந்து வருவதால், இந்த ஆற்றுத் தண்ணீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

மிகவும் தித்திப்பாக இருக்கும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை ஒரு முறையாவது கண்டிப்பாக பருக வேண்டும். தாமிரம் உலோகம் கலந்திருப்பதால் இந்நீர் சிவந்த நிறத்தில் காணப்படும்.


Tuesday, 7 March 2017

தக்கலை தவஞானி பீர் முகம்மது அப்பா



பதினெட்டுச் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் தவஞானி பீர் முகம்மது. தக்கலையில் ஞானத் தவ வாழ்க்கை நடத்தி இப்பூவுலகிலிருந்து விடைபெற்ற மெய்ஞானியின் தர்கா கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் செல்வராகப் பிறந்து முந்நுாறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் ஞானச்செல்வர் பீர் முகம்மது. அவர் பிறந்த ஆண்டு தெளிவாக தெரியவில்லை. பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. கீழக்கரையில் அடக்கமாகியுள்ள இறைநேசர் சதக்கத்துல்லா அப்பா, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆகியோரின் சம காலத்தவர் பீர் முகம்மது அப்பா.
திருநெறி நீதம் நூலை ஹிஜ்ரி 1022-ஆம் ஆண்டில் தாம் இயற்றியதாகக் கூறியுள்ளார் பீர் முகம்மது அப்பா, பிள்ளைப் பருவத்திலேயே பெற்றோரையும் பிறந்த ஊரான தென்காசியையும் விட்டுப் பிரிந்து ஏறத்தாழ 95 ஆண்டு காலம் காடுகளிலும் மலைகளிலும் தவயோகத்தில் அப்பா ஈடுபட்டார். அக்காலத்திய திருவிதாங்கூர் அரசின் மலைப் பகுதிகளிலும் ஆன்மிகப் பயிற்சிகளைப் பெற்றார் என்று கூறப்படுகிறது.
பல்லாண்டு காலம் தவவாழ்வு நடத்திய அவரது பெயரை நினைவூட்டும் வகையிலேயே கேரள மாநிலத்தில் யானைமலையிலுள்ள ஊர் இன்றும் பீர்மேடு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. கேரளத்தில் அரசர்களும், எளிய மக்களும் இவரைக் கண்டு பல துன்பங்களுக்கும் நிவாரணம் பெற்றுள்ளனர். யானைமலைக் காட்டில் பதினைந்து ஆண்டுகள் பரமானந்த நிலையில் அப்பா ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த புலி,சிங்கம், யானைகள் அவருடன் அன்புறவு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கொச்சியை அப்போது ஆண்டுவந்த அரசர் மாறுவேடத்தில் அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து பீரப்பாவின் அறிவுரையைக் கேட்டுப் பின்னர் துறவியானதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. திருவிதாங்கூர் மன்னரும் பீரப்பாவின் அடிபணிந்து நின்று நல்லாசியைப் பெற்றுள்ளார்.
பீரப்பாவின் அர்ப்பணிப்பும் தனித்தன்மையும்
ஞானநெறியில் ஆழ்ந்திருந்த தக்கலை அப்பா இறைவழிபாட்டில் ஈடுபடுவதில்லை என்று சிலர் சந்தேகித்தனர். அவர்கள் கீழக்கரை சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று முறையிட்டனர். அதனால் அவரைப் பார்க்க வந்த சதக்கதுல்லா, பீரப்பாவின் ஆன்மிக உயர்நிலையைக் கண்டு வியந்து நெகிழ்ந்தார்.
“மலை மேடு சிறிது … எங்கள் மன மேடு பெரிது” என்ற தக்கலை பீரப்பாவின் பாடல் வரி அவற்றுக்கெல்லாம் அரிய எடுத்துக்காட்டு. சூஃபி ஞான நெறிக்கும், தமிழ்ச் சித்தர் மரபுக்கும் பாலமாக தக்கலை பீரப்பா கருதப்படுகிறார்.
வாழ்க்கையின் பிற்பகுதியை தக்கலையில் கழித்து அங்கேயே அடக்கமானார் பீர் அப்பா.
தமிழ்ப் புலமையும், அரபு மொழி ஆற்றலும், பிற மொழி அறிவும், தேர்ந்த பயிற்சியும் பெற்ற அவர், தொழுகையிலும் இறை வணக்கத்திலும் மக்களை ஈடுபடுத்தும் வண்ணம் எண்ணற்ற பாடல்களை இயற்றினார், பிஸ்மில் குறம் படைப்பில் இடம்பெறுள்ள ஒரு பாடல் அரிய உதாரணம்:
“தெளிவான தீன்குலத்தில் உள்ளவரே கேளும் தெவிட்டாமல் தொழுதுகொண்டு வணக்கம் செய்ய வேணும்”
தொழுகையின் உயர்வையும், அதை நிறைவேற்ற வேண்டிய முறையையும் அப்பா எடுத்துரைக்கும் சிறப்பு சிந்தைக்கு விருந்தாக அமைகிறது.
பீரப்பாவின் ஞான விருந்து
பீர் அப்பா 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட அருட்பாக்களை இயற்றியுள்ளார், ஞானப் பால், ஞானப் பூட்டு, ஞானப் புகழ்ச்சி, ஞான மணிமாலை, பிஸ்மில் குறம், ஞானக் குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, ஞான நடனம், ஞான முச்சுடர்ப் பதிகங்கள், ஞானத் திறவுகோல், ஞான சித்தி, ஞானக் கண், ஞான விகடச் சமர்த்து, ஞான உலக உருளை, ஞான மலைவளம், மெய்ஞ்ஞானக் களஞ்சியம், திருமெய்ஞ்ஞானச் சரநுால்,மெய்ஞ்ஞான அமிர்தக் கலை, திருநெறி நீதம், மஃரிபத்து மாலை, ஈடேற்ற மாலை,ரோசு மீசாக்கு மாலை, மிகுராசு வளம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
அவர் இயற்றிய ஞானரத்தினக் குறவஞ்சி, பதினெண் சித்தர்களின் தொகுப்பான பெரிய ஞானக்கோவையில் இடம்பெற்றுள்ளது, 66 கண்ணிகளைக் கொண்ட இக்குறவஞ்சியில் சிங்கன்- சிங்கி உரையாடல் மூலம் தத்துவங்கள் விளக்கப்படுகின்றன.
பீரப்பாவின் ஞானப் புகழ்ச்சி தேனமுதக் களஞ்சியம் என்று போற்றப்படுகிறது, இறைவனின் அருங்குணங்களை எடுத்துரைத்து, அவனிடம் சரணடைந்து அடைக்கலம் நாடும் 685 பாடல்களைக் கொண்ட ஞான இலக்கியம் இது.
‘‘அவன்தான் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான். தன்னை வணங்குவதற்காகவே வானவர்களையும் மனிதர்களையும் அவன் படைத்தான்..’’ என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன, இவற்றைக் கருப் பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட இனிய இலக்கியமே ஞானப்புகழ்ச்சி.
“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக மனுவைப் படைத்தான் தனை வணங்க” என்பது அப்பாவின் ஆன்மிக முழக்கம்.
இரவு முழுவதும் ஞானப்புகழ்ச்சி
பீர் முகம்மது அப்பா அவர்களின் நினைவு விழா ஆண்டுதோறும் ரஜப் மாதம் பிறை 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வுகளில் ஞானப் புகழ்ச்சி இரவு முழுதும் இன்றும் தவறாமல் படிக்கப்படுகிறது. அவரது நினைவு விழாவில் சமயபேதமின்றி பல இனமக்களும் ஒன்றுகூடிக் கலந்து கொள்கின்றனர். தமிழகமும் கேரளமும் மனதால் இணையும் நிகழ்வாக இந்த ஆன்மிக விழா இருக்கிறது.




பீர்முகம்மது ஒலியுல்லாஹ்வின் ஒன்பது மெஞ்ஞானப் பாடல்கள் இறுவட்டாக (ஒலித்தகடு) வெளியாகியிருக்கிறது.

பீர் முகம்மது ஒலியுல்லாஹ்வி்ன் தமிழ் இலக்கியப் பங்களிப்பு அளப்பரியது. இன்று இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று முன் வைத்துப் பேசப்படும் பல இலக்கிய நூல்களைப் பாடிய மகத்தான ஞானியாக அவர் விளங்குகிறார்.

“திருநெறி நீதம், பிஸ்மில் குறம், ரோசு மீசாக்கு மாலை, மகரிபத்து மாலை, ஞானமணிமாலை, ஞானப் புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப் புட்டு, ஞானக் குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, திருமெய்ஞ்ஙான சரநூல், ஞான நடனம், ஞான முச்சுடர் காப்புப் பதிகம், ஹக்கு முறாது பதிகம், மயில் வலம்புரிப் பதிகம், றப்பில் ஆலமீன் பதிகம், கஃபத்துல்லாப் பதிகம், கண்மணிப் பதிகம், நினைவுப் பதிகம், இலாஹிப் பதிகம், நாட்டப் பதிகம், பதமருள் பதிகம், குருசீடப் பதிகம், ஓர்மைப் பதிகம், மனப் பதிகம், தறஜாத்துப் பதிகம், ரகுமான் பதிகம், மெய்ஞ்ஙான அமிர்த கலை, ஞர்னவுலக உருளை, ஞான தித்தி, ஞானத் திறவுகோல், ஞானவிகடம், ஞானக் கண், மிகுறாசு வளம், - ஆக பாடல் பதினெண்ணாயிரத்தில் திருநெறி நீதம், பிஸ்மில் குறம், ரோசு மீசாக்கு மாலை இம்மூன்றிலும் - சேகு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் உரையுடன் பாடப்பட்டது. மற்றவையனைத்தும் அருள் உதிப்பு மேல் பாடப்பட்டது என்று ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகிறது.” - (ந.சை. இஸ்மாயில் அரபி சாய்பு)

மேற்படி குறிப்பு 2007ல் மீள்பதிப்பாக வெளியிடப்பட்ட திருநெறி நீதம் நூலின் முன்னுரையாகக் காணப்படுகிறது.

இப்படிப் பெயர் பெற்ற பீர் முகம்மது ஒலியுள்ளாஹ்வின் பாடல்கைளை சீறாக் கலைஞர் குமரி அபுபக்கர் அவர்கள் பாடியுள்ளார். கவிஞர் தக்கலை ஹலீமா, குமரி அபுபக்கர் ஆகியோரின் இசையமைப்பில் உருவான இந்த இறுவட்டின் இசை ஒருங்கிணைப்பாளர் துளசி வயக்கல் அவர்கள். தக்கலை தாஹிர் அவர்கள் இதைத் தயாரித்து வழங்கியுள்ளார்.

“ஸூஃபி ஞானத்தில் சுவை கொண்டு இறைவனை நாடியும் இதயங்களைத் தேடியும் பாய்ந்து வருகின்ற பாசனப் பெருக்கு. உலகத் தமிழ்ச் செம்மொழி சிகரங்களை நோக்கி தன் சிம்மாசனத்தை நகர்த்தும் இந்த மகரந்தப் பொழுதில் ஞானப் புகழ்ச்சியிலிருந்து சில பாடல்களை உயிருருகும் இசையில் உங்கள் முன் வைக்கிறோம்” என்று இந்த இறுவட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


.

இந்த இறுவட்டிலிருந்து மூன்று பாடல்களை இங்கே இணைத்திருக்கிறேன். இணைப்பைச் சொடுக்கிப் பாடல்களைக் கேட்க முடியும்.
பாடல் - 01

பாடல் - 02

பாடல் - 03


இந்த இறுவட்டு வெளியீட்டில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்!

Monday, 6 March 2017

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு

முழுவதும் படிக்க இங்கு கீழே  சொடுக்கவும் 

 1934_கல்லிடை_நகர்_சாமிநாத_கவிராயர்_இயற்றிய_பொதிகை_நிகண்டு_ID=13.pdf


ஆசிரியர் :
சாமிநாத கவிராயர்
பதிப்பாசிரியர் :
வையாபுரிப் பிள்ளை, எஸ்
பதிப்பு பரிசோதித்தவர் :
வையாபுரிப் பிள்ளை, எஸ்
 
புத்தகப் பிரிவு :நிகண்டுகள்
பதிப்பு ஆண்டு :1934
பதிப்பு :முதற் பதிப்பு
பக்கங்கள் :295

குணங்குடி, மஸ்தான்சாகிபவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாடற்றிரட்டு



முழுவதும் படிக்க இங்கு கீழே  சொடுக்கவும்.......

1923_குணங்குடி,_மஸ்தான்சாகிபவர்கள்_திருவாய்மலர்ந்தருளிய_திருப்பாடற்றிரட்டு_ID=47.pdf

ஆசிரியர் :
மஸ்தான் சாகிபு, குண்ணங்குடி
பதிப்பாசிரியர் :
இட்டா - சக்கரபாணி நாயுடு
பதிப்பு பரிசோதித்தவர் :
ஷெய்குத்தம்பிப்பாவலர், கா. ப
புத்தகப் பிரிவு :தொகுப்பு
அச்சகம் :பி. என். அச்சியந்திரசாலை
பதிப்பு ஆண்டு :1923
பதிப்பு :முதற் பதிப்பு
பக்கங்கள் :356                                                                                

Sunday, 5 March 2017

நெல்லை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி






மட்டன் பிரியாணி  தேவையானப் பொருட்கள்:
மட்டன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணை – 100 கிராம்
டால்டா – 150 கிராம்
பட்டை – 2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு – ஐந்து
ஏலக்காய் – முன்று
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/2 கிலோ
இஞ்சி – 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு – 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி – ஒரு கட்டு
புதினா – 1/2 கட்டுப. மிள்காய் – 8
தயிர் – 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் – 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி – 1 பின்ச்
ரெட்கலர் பொடி – 1 பின்ச்
எலுமிச்சை பழம் – 1நெய் – ஒரு டீஸ்பூன்
மட்டன் பிரியாணி  செய்முறை:

முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும்
ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு ,எலக்காய் போடவும்.அது வெடித்ததும்
நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு
நன்றாக கிளறி மூடி விடவும்.
நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.
ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்தமல்லி புதினா வை போட்டு கிளறவும்
அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். எண்ணையில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன்
மட்டனை போடவும்.
மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று நிமிடம் கிளறவும். பிறகு
தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.
வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.
தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.
அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும்.
உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.
வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும்.
உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும்.
கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து
அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்
ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை
அந்த சுடு கஞ்சி இரண்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து தூவி விடவும். அதன் பிறகு
இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு
பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும்
சுவையான மட்டன் பிரியாணி தயார்.
இந்த மட்டன் பிரியாணியை வறுத்த முந்திரிப்பருப்பு, கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தால் பார்க்கவும்,
சுவைக்கவும் சூப்பராக இருக்கும்