ஓவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வித மதிப்பு இருக்கும். அது திண்பண்டமாக இருந்தாலும் சரி, நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருளாக இருந்தலும் சரி, நாம் அந்த பொருளுக்கு தரும் முக்கியத்துவத்தை வைத்து பொருளுக்கான முக்கியத்துவத்தை உணரலாம். நெல்லை என்ற உடன் நமக்கு தாமிரபரணியும், நெல்லையப்பர் கோவிலும் நினைவிற்கு வருகிறதோ இல்லையோ அல்வா நமக்கு நினைவிற்கு வரும் தமிழகத்தின் எந்த பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் நெல்லை அல்வாவிற்கு மயங்காதவர் எவரும் இல்லை எனலாம். அதே போல் பத்தமடை பாய் . வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு பத்தமடை பாய் உலக புகழ் பெற்று விளங்குகிறது. அதே போல் அப்பளம் என்ற உடன் நினைவிற்கு வருவது கல்லிடைக்குறிச்சியின் கமகமக்கும் அப்பளம் தான்.
இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் படத்தில் வரும் அப்பளம் தயாரிக்கும் காட்சிகள் பல கல்லிடைக்குறிச்சியில் எடுக்கப்பட்டவைதான். இன்றைக்கும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களின் கைவண்ணத்தில் கல்லிடை அப்பளத்தின் மவுசு வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விருந்து என்றால் எத்தனை வகை கறி வைத்திருந்தாலும் அப்பளம் இல்லையென்றால் அந்த விருந்தில் ஏதோ ஒன்று குறைகிறதே என வருத்தப்படுவார்களாம். அந்தளவிற்கு அப்பளம் அனைத்து மதத்தினரின் விருந்துகளிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றால் அது மிகையல்ல. ஏன் கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்க்கு மட்டும் இச்சிறப்பு என்றால் தமிழகத்தில் பல இடங்களிலும் தயாராகும் அப்பளங்கள் அனைத்தும் இயந்திரங்களின் உதவியுடன் தயாரிக்கப்படுபவை. ஆனால் கல்லிடைக்குறிச்சி அப்பளம் அவ்வாறு அல்ல . கையினால் பக்குவபடுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது மேலும் இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் தாமிரபரணி தண்ணீரின் தனிச்சுவை என்கிறார் பல ஆண்டுகளாக அப்பளத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் கண்ணன். இவரின் அப்பளம் இன்றைக்கு மலேசியா வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கண்ணன் நம்மிடம் கல்லிடைக்குறிச்சியில் 10க்கும் மேற்பட்ட அப்பள டிப்போ உள்ளது. பெரும்பாலும் உளுந்து அப்பளம் தயாரிக்கப்பட்டாலும், தற்சமயம் அரிசி அப்பளம், கிழங்கு அப்பளம், இரட்டை அப்பளம், பப்படம், ஆகியவை தயார் செய்யப்படுகிறது.
அப்பள தயாரிப்பை பொறுத்தவரை அப்பளம் தயாரிக்க சுத்தம் செய்யப்பட்ட உளுந்தம் பருப்பு, மற்றும் எண்ணெய் சீரகம் மற்றும் பெருங்காயம் இவை போதுமானது ஆகும். உளுந்தம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பின்பு கல்லுரலில் இட்டு நன்கு மாவாக அரைத்து கொள்ள வேண்டும் பின்பு அதை நன்றாக சலித்து கொள்ள வேண்டும் அரைத்த மாவை நன்கு சலித்து பின் அதனோடு சீரகம் மற்றும் அளவான உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அதையும் மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். நன்கு பிசைந்த மாவின் மீது எண்ணெய் தடவ வேண்டும். பிசைந்த மாவை உருட்டி கல்லுரலில் நன்கு இடிக்க வேண்டும். எவ்வளவிற்க்கு நன்றாக இடிக்கிறோமோ அந்தளவிற்கு அப்பளம் மிருதுவாக இருக்கும் என்பதால் பிசைந்த மாவை நன்கு கவனத்துடன் இடிக்கவேண்டும் இடிக்கும் பொழுது அவ்வப்பொழுது மாவின் மீது எண்ணெய் தடவ வேண்டும். நன்கு இடிக்கப்பட்ட மாவு ரப்பர் போல் ஆனவுடன் தேவையான அளவில் மாவை உருட்டி அப்பள அளவிற்கு ஏற்றாற்போல் உருட்டவேண்டும். உருட்டபட்ட அப்பளத்தை அதிகம் வெயில் படாத இடத்தில் காய வைக்க வேண்டும் . இப்பொழுது சுவை மிகு அப்பளம் ரெடி.
கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு தனி மவுசு ஏன் உண்டு என்றால் கைபக்குவம் என்கிறார் கண்ணன். எனவே தான் மிகவும் சுவையாக இங்கு அப்பளம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது .நீங்களும் ஒருமுறை கல்லிடைக்குறிச்சி அப்பளத்தை ருசித்து பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்
No comments:
Post a Comment